×

சேகர் ரெட்டி மீதான வழக்கு ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: சேகர் ரெட்டி மீதான அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், சென்னை  உயர் நீதிமன்றம் விசாரணைக்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனையை நடத்தியது. அப்போது, பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள், புதிய ரூ.2000 நோட்டுகள், தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய 3 துறைகளும் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தின. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சேகர் ரெட்டி வழக்கு தொடர்ந்தார்.

அதில், வருமான வரித்துறை சோதனையில் கைப்பற்ற பணம் நிறுவனங்களுக்கு சொந்தமானது. நிறுவனத்தில் 3 பேர் பார்ட்னர்களாக உள்ளனர். சோதனையில் சிக்கியதில் ரூ.12 லட்சம் மட்டுமே என்னுடைய பணம். இதற்கு நான் அட்வான்ஸ் வரியை செலுத்தி வருவதால் சிபிஐ, வருமான வரித்துறை ஆகியோர் தன் மீது தொடர்ந்து வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐ மற்றும் வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்தது.

இதையடுத்து, மேற்கண்ட காரணங்களை கூறி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சேகர் ரெட்டி தனியாக ஒரு வழக்கை தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின்போது, சேகர் ரெட்டியிடம் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால், வழக்கை ரத்து செய்ய கூடாது என்று அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், அமலாக்கத்துறை விசாரணை நடத்த அனுமதி அளித்தது.

இதை எதிர்த்து, சேகர் ரெட்டி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘இந்த விவகாரத்தில் சேகர் ரெட்டிக்கு எதிரான சட்ட விரோதமான பணப்பரிவர்த்தனை செய்தமைக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை எனக்கூறி வழக்கை சி.பி.ஐ. முடித்து வைத்துள்ளது. அதனை அடிப்படையாக் கொண்டு அமலாக்கத் துறையின் வழக்கையும் ரத்து செய்து விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ வாதிட்டார். இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ‘சட்ட விரோத பணப்பரிவர்த்தனைக்கு ஆதாரம் உள்ளதால் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது. அனைத்து வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஒத்திவைத்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வினீத் சரண் மற்றும் ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அமர்வு நேற்று தீர்ப்பை வழங்கியது. அதில்,‘தொழிலதிபர் சேகர் ரெட்டி மீதான வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஐந்தரை ஆண்டுகளாக விசாரணை நடத்தியும் சட் டவிரோதப் பணப்பரிவர்த்தனை செய்தமைக்கான எந்தவொரு ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை. அவர்கள் தாக்கல் செய்வார்கள் என்பதற்கான முகாந்திரம் இல்லை. பறிமுதல் செய்யப்பட்டது அவருடைய பணம் இல்லை. நிறுவனத்திற்கு சொந்தமானது. நிறுவனம் சார்பில் அட்வான்ஸ் வரி செலுத்தப்பட்டு வருகிறது என்று சேகர் ரெட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்கிறோம். சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கும் தடை விதிக்கிறோம்’ என்று தீர்ப்பு அளித்தனர்.

Tags : Sehgar Reddy ,Supreme Court , Case against Sehgar Reddy quashed: Supreme Court orders action
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...